செயற்திட்டம்

ஆரோக்கிய உணவும் கலாச்சாரப் பரிமாற்றமும்
“ஆரோக்கிய உணவும் கலாச்சாரப் பரிமாற்றமும்” என்ற தலைப்பில் Zug  மாநிலத்தில் ஐந்து வேறுபட்ட கலாச்சாரப்பின்னணி கொண்ட புலம்பெயர் சமூகத்தினருடனான நிகழ்வே இதுவாகும். இத்தகைய நிகழ்வு கடந்த ஆண்டும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்ட தலைப்பில் இந்த ஐந்து சமூகத்தினரும் அவரவர்களின் முறையில் ஆறு மாத காலத்திற்கு ஒருங்கிணைந்த செயற்திட்டங்களில் ஈடுபடுவர். இறுதி நிகழ்வில் இந்த செயற்றிட்டம் மூலம் பெறப்பட்ட அனுபவங்கள், அனுகூல, பிரதிகூலங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்படும்.

தீய நெறிக்கு அடிமையாகும் நிலையை முதலே அறிந்து கொள்ளலும் அதைத் தவிர்த்தலும்
St. Gallen  மாநிலத்தில் வெளிமயக்கத்திற்கு அடிமையாதலை தடுக்கும் நிறுவனமும் நலவாழ்வு அமைப்பும் இணைந்து இத்திட்டத்தினை முன்னெடுக்கின்றனர். இதில் பெற்றோர், ஆசிரியர், பிள்ளைகள் ஆகியோர் இணைக்கப்பட்டு கல்விச்சேவை, தமிழர் இல்லம் மற்றும் கோயில் ஆகியவற்றின் அனுசரனையுடன் இத்திட்டம் இவ்வாண்டு (2015) முன்னெடுக்கப்படுகின்றது.

ஆரம்பத்தகவல் (Erstinformation)
முதல் கோணல் முற்றும் கோணல் என்பது எமது பழமொழி. ஆரம்பம் நன்றேல் முடிவும் நன்று என்பது புதுமொழி. அந்த வகையில் புதிதாக சூறிச் நகரில் வசிக்க வருவோர் அறிந்திருக்க வேண்டிய முக்கிய பல தகவல்களை அறிவிக்கும் பொருட்டு ஆரம்பத்தகவல் எனும் வகுப்புகள் இவ்வாண்டு ஆரம்பமாகின்றன. இவ்வகுப்புகளில் உதாரணமாக சுகாதாரத்துறை, கல்வித்துறை, மற்றும் ஆலோசனை மையங்கள் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்படும். இச்சேவையானது சமூக இணைவாக்கத்திற்குப் பெரிதும் உறுதுணையான விடயம் ஆகும். வகுப்பில் பங்கேற்போருக்கு பங்குபற்றியதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

ஆற்றுப்படுத்தல்
போர் ஏற்படுத்திய வடுக்கள் தமிழ் மக்களின் மனதில் ஏராளம்.  இவ்வாறு போரினால் ஏற்பட்ட துன்பங்களினால் வருந்தும் மக்களுக்கு இது ஒரு மாபெரும் சேவையாக அமையும். இச்சேவையை வழங்க நலவாழ்வு நிறுவனமானது தகுதியுள்ள தமிழர்களை இச்சேவைக்கென பயிற்றுவித்து நியமனம் செய்ய விழைகின்றது.